சினிமா
சர்கார் பட கதை என்னுடையது தான் - ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் கதை என்னுடையது தான் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார். #Sarkar #ARMurugadoss
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எழுத்தாளரும் உதவி இயக்குனருமான வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்றும், செங்கோல் என்ற பெயரில் அக்கதையை தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சர்கார் படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். மேலும் திரைப்பட எழுந்தாளர்கள் சங்கத்திலும் புகார் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் கே.பாக்யராஜ் கூறும் போது, செங்கோல் மற்றும் சர்கார் படங்களின் கதையை ஆய்வு செய்தோம். அதில் இரண்டு கதையின் முக்கிய கரு ஒன்று தான் என்பதை அறிந்தோம்.
நான் ஏ.ஆர்.முருகதாசை தொடர்பு கொண்டு சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. அதனால் எங்களுக்கு வேறு வழியில்லாமல் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது ஆகிவிட்டது.
கே.பாக்யராஜும் சர்கார் படத்தின் கதையும் வருண் ராஜேந்திரனின் கதையும் ஒன்று தான் என்று கூறியிருப்பது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, ‘சர்கார் பட கதை விவகாரம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே அது பற்றி நான் கருத்து கூற முடியாது. நமது நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். உண்மை தான் இறுதியில் வெற்றி பெறும்.
ஏதோ ஒரு உள் நோக்கத்தோடு தான் சர்கார் பட கதை விவகாரம் கிளப்பி விடப்பட்டு இருக்கிறது. ஒரு கதையின் கரு ஒரே மாதிரியாக பலருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் திரைக்கதை தான் முக்கியம். அதில் ஒற்றுமை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்’ என்றார்.