சினிமா (Cinema)
நயன்தாரா, சித்ரா

நயன்தாராவை முன்மாதிரியாக கொண்டவர் சித்ரா- ‘கால்ஸ்’ பட இயக்குனர் பேட்டி

Published On 2020-12-14 08:18 GMT   |   Update On 2020-12-14 08:18 GMT
தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா, நயன்தாராவை முன்மாதிரியாக கொண்டவர் என கால்ஸ் பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வந்த சித்ரா சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது நடிகர்- நடிகைகளையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டி.வி.தொடரில் மிகவும் பிரபலமாக விளங்கியதால் சித்ராவுக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. 

அவர் ‘கால்ஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். கொரோனா பரவலுக்கு முன்பே இந்த படத்தில் சித்ரா நடித்து முடிந்துவிட்டார். இந்த படத்தை ஜெ.சபரிஷ் இயக்கி உள்ளார். ‘கால்ஸ்’ படத்தை கடந்த ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். லாக்டவுன் போடப்பட்டதால் அது நடக்காமல் போனது. படம் வெளியாகும் முன்பே சித்ரா தற்கொலை செய்து கொண்டது படக்குழுவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக ‘கால்ஸ்’ படத்தின் இயக்குனர் சபரிஷ் கூறியதாவது: ‘கால்ஸ்’ படத்தில் பி.பி.ஓ.வில் பணிபுரியும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண்ணின் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் ரித்விகாவை நடிக்க வைக்க முயன்றேன். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு மகிமா நம்பியாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அப்போது அவர் ‘சாட்டை’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.



அதன் பிறகு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்த அர்த்தனா பினுவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அப்போது தான் நடிகை சித்ரா பற்றி கேள்விப்பட்டேன். அவர் பணியில் கொண்டிருந்த அர்ப்பணிப்பு மற்றும் வாழ்க்கை போராட்டங்களை அறிந்தேன். அவர் ஒரு தமிழ்ப்பெண் என்பதால் பி.பி.ஓ.வில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்துக்கு பொருந்துவார் என்று எதிர்ப்பார்த்தேன்.

இந்த படத்தின் கதையை நான் சித்ராவிடம் சொன்ன போது நடுவில் நிறுத்தி, இது போன்ற கதைக்காக காத்திருந்தேன். செமையா இருக்கு” என்று கூறினார். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். மீதமுள்ள கதையை சொல்ல வேண்டாம். முழு படத்தையும் பெரிய திரையில் பார்ப்பேன் என்றார். ஆனால் இப்போது அவர் இல்லை.

படத்தின் படப்பிடிப்பின் போது சித்ரா மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். கடந்த மே மாதம் 2-ந்தேதி அவரது பிறந்த நாளின் போது டிரெய்லரை அவருக்கு அனுப்பினேன். மிகவும் நன்றாக இருப்பதாக கூறினார். ஆனால் ஒரே ஒரு வருத்தம் அவர் இன்னும் முழு படத்தையும் பார்க்க வில்லை.

அவர் நடிகை நயன்தாராவை தனது முன் மாதிரியாக கருதினார். நயன்தாரா ஒரு படத்தில் அணிந்திருந்த உடையை போல உடை அணிய வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவர் தற்கொலை செய்த போது படத்தில் அணிந்திருந்த நைட்டியை அணிந்திருந்தார். அந்த ஆடையை நாங்கள் தஞ்சாவூரில் இருந்து வாங்கி இருந்தோம். இது படத்தின் தொடக்க காட்சிக்கான ஆடை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News