சினிமா செய்திகள்

ஹெல்மெட் அணியாததற்கு அபராதம்: பிரசாந்த் விளக்கம் - என்ன சொன்னார் தெரியுமா?

Published On 2024-08-02 04:45 GMT   |   Update On 2024-08-02 04:45 GMT
  • வீடியோ வைரலான அளவுக்கு, பிரசாந்த் ‘ஹெல்மெட்' அணியவில்லையே... என்ற பேச்சும் வைரலானது.
  • கடந்த ஒரு வருட காலமாக ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன்.

தமிழ் சினிமாவில் 90 களில் 'சாக்லேட் பாய்' ஆக வலம் வந்த நடிகர் பிரசாந்த், 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 'அந்தகன்' என்ற படம் மூலமாக 2-வது இன்னிங்சில் நுழையவுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். 'யூ-டியூப்'பை சேர்ந்த இளம்பெண் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது. அதேவேளை பிரசாந்துக்கு வினையாகவும் அமைந்தது.

காரணம், மோட்டார் சைக்கிளில் சுற்றியபடி பேட்டியளித்த நடிகர் பிரசாந்த், 'ஹெல்மெட்' அணியாதது தான். மேலும், பேட்டி கண்ட அந்த யூ-டியூப் சேனல் இளம்பெண்ணும் 'ஹெல்மெட்' அணியவில்லை. இதனால் வீடியோ வைரலான அளவுக்கு, பிரசாந்த் 'ஹெல்மெட்' அணியவில்லையே... என்ற பேச்சும் வைரலானது.

 

நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாததையும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட ரசீதையும் காணலாம்.

இந்த வீடியோவை வைரலாக்கிய விவகாரம் பிடித்த இளைஞர்கள், ''நாங்களெல்லாம் ஹெல்மெட் போடாம போனா, துரத்தி பிடிக்கும் போலீசார், இதனை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை. இதை கேட்பார் இல்லையா...'' என்று கொந்தளித்தனர்.

குறிப்பாக சென்னை போக்குவரத்து போலீசாரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், இந்த வீடியோவை 'டேக்' செய்து, நடவடிக்கை எடுக்குமாறு ஆதங்கப்பட்டனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தே அபராத வேட்டையில் இறங்கும் போலீசாருக்கு, லட்டு போல ஆதாரத்தை தந்தால் சும்மா விடுவார்களா... உடனடியாக மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' போடாமல் பயணித்த குற்றத்துக்காக நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் தங்களை நோக்கி கேள்வி எழுப்பியோருக்கு பதில் அளிக்கும் விதமாக, பிரசாந்த் 'ஹெல்மெட்' போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய புகைப்படத்தையும், அபராதம் விதிக்கப்பட்ட ரசீதையும் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டனர்.

வைரலாகும் என நினைத்த வீடியோ வினையாகி விட்டது, பிரசாந்த் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த் கூறியதாவது:

கடந்த ஒரு வருட காலமாக ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு முழுக்க இலவசமாக ஹெல்மெட் வழங்கி இருக்கிறேன். நீங்களும் அந்த செய்தியை போட்டு இருக்கிறீர்கள்.

நாகர்கோவில், திருச்சி, மதுரையில் ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். பாதுகாப்பாக ஓட்டுங்க, நிதானமாக ஓட்டுங்க என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இப்போது இந்த நிகழ்வு மூலமாக எனக்கு ஒன்மோர் பிளாட்பார்ம் கிடைத்து இருக்கிறது.

தயவுசெய்து ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க. அது எனக்கில்லை உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் முக்கியம்.

நீங்கள் வெளியே செல்லும்போது 5 நிமிடம் முன்பே கிளம்புங்கள். அவசரமாக வண்டி ஓட்டாதீர்கள்.

உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஹெல்மெட் போடு ஓட்டுங்க. பாதுகாப்பாக இருங்க என்று கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News