null
அம்பேத்கரின் 'சாதியை அழித்தொழித்தல்' புத்தகம் என்னை மாற்றியது - ஜான்வி கபூர்
- அம்பேத்கர் சாலையில் வாழ்ந்தாலும் சாதிப் பாகுபாடுகள் பற்றி எனக்கு போதிய அளவிற்கு தெரியாது.
- அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி ஜான்வி கபூர் பிஸியாக நடித்து வருகிறார்.
அண்மையில் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான Mr & Mrs மஹி படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
தி லாலன்டோப் சினிமா யூட்யூப் சேனலில் Mr & Mrs மஹி படம் தொடர்பாக ஜான்வி கபூர் பேட்டி அளித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அப்போது வைரலானது.
அந்தப் பேட்டியில் பேசிய ஜான்வி கபூர் தனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் இருப்பதாக கூற, உடனே நெறியாளர், 'வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள்' என்று கேட்கிறார். அதற்கு அவர், "மகாத்மா காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையில் 'சாதி' குறித்து அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையிலான உரையாடலையும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் கொண்டிருந்த பார்வையையும் அறிந்துகொள்ளலாம்.
சாதி குறித்த தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்திலிருந்தே அம்பேத்கர், தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் காந்தியின் பார்வை தொடர்ந்து வளர்ந்து வந்தது என்று நான் நினைக்கிறேன்.
நம் சமூகத்தில் இருக்கும் இந்த சாதிய பிரச்சினை பொறுத்தவரை, மூன்றாவது நபரின் கண்ணோட்டத்திலிருந்து அதை பார்ப்பதற்கும், அந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது" என்றார்.
ஜான்வி ஒரு நடிகை என்பதை தாண்டி சமூகத்தைப் பற்றிய அவரது பரந்த புரிதல் பெரும்பாலான மக்களை கவர்ந்தது.
அதே சமயம் பட ப்ரோமோஷனுக்காக ஜான்வி கபூர் செய்த PR ஸ்டண்ட் இதுவென சமூக வலைத்தளங்களில் சிலர் குற்றம் சாட்டினர்.
தற்போது அம்பேத்கர் - காந்தி தொடர்பாக பேசியது பற்றி ஜான்வி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "அம்பேத்கர் - காந்தி தொடர்பாக பேட்டி கொடுத்ததற்கு அடுத்து என்னுடைய PR டீமிடம் ஏதாவது தவறாக பேசி விட்டேனா என்று கேட்டேன். அவர்கள் அம்பேத்கர் - காந்தி பற்றி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்தனர். பின்னர் நானும் அதை நினைத்து பதற்றமடைந்தேன். பட வெளியீட்டிற்கு முன்பு எந்த சர்ச்சையும் வேண்டாம் என்று நினைத்து பேட்டியின் அந்த குறிப்பிட்ட பகுதியை நீக்க வேண்டும் என்று யூட்யூப் சேனல் நிர்வாகியிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை மறுத்து விட்டார்.
அம்பேத்கர் சாலையில் வாழ்ந்தாலும் சாதிப் பாகுபாடுகள் பற்றி எனக்கு போதிய அளவிற்கு தெரியாது. அம்பேத்கர் எழுதிய சாதியை அழித்தொழித்தல் புத்தகத்தை படித்தது எனது சிந்தனைகளை மாற்றியமைத்தது.
அம்பேத்கரின் இந்த புத்தகம் தான் நம் சமூகத்தில் வர்க்க பாகுபாடும் சாதிப் பாகுபாடும் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதை எனக்கு உணர்த்தியது. நாம் அதை பற்றி பேசுவது இல்லை. அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.