null
தமிழில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப் - ஹீரோ யார்?
- 'கேங்ஸ் ஆப் வாசிப்பூர்' படம் எடுக்க காரணமே சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் தான்
- அனுராக் காஷ்யப்பிற்கு எப்பொழுதும் தமிழ் சினிமா மீதும் , மலையாள சினிமா மீதும் ஒரு ஆர்வம் உண்டு.
அனுராக் காஷ்யப் இந்தி சினிமாவின் முதன்மையான இயக்குனர். ராம் கோபால் வர்மாவுடன் இணைந்து தொலைக்காட்சி தொடரான 'சத்யா'-வில் எழுத்தாளராக தன் பயணத்தை தொடங்கினார். 'பான்ச்' என்ற படத்தை அனுராக் காஷ்யப் முதன் முதலில் இயக்கினார். ஆனால் அப்படம் சென்சார் பிரச்சனைகளால் திரைக்கு வரவில்லை. 2004-ஆம் ஆண்டு 'பிளாக் ஃப்ரைடே'என்ற படத்தை இயக்கினார். 2007 ஆம் ஆண்டு 'நோ ஸ்மோக்கிங்' படத்தையும், 2009-ல் 'தேவ். டி'என்ற படத்தையும் இயக்கினார். 2012 ஆம் ஆண்டு 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்தை இயக்கினார். இத்திரைப்படம் அனுராக் காஷ்யப்புக்கு மிகப் பெரிய பெயரையும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. இத்திரைப்படம் இரண்டு பாகமாக வெளியானது. இரண்டு பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நெட்ஃபிக்ஸ் முதன் முதலில் தயாரித்த இந்தியன் வெப்சீரிஸான 'சாக்ரட் கேம்ஸ்' என்ற சீரிசை அனுராக் காஷ்யப் இணைந்து இயக்கினார்.
அனுராக் காஷ்யப்பிற்கு எப்பொழுதும் தமிழ் சினிமா மீதும் , மலையாள சினிமா மீதும் ஒரு ஆர்வம் உண்டு. மலையாள சினிமா அளவிற்கு இந்தி சினிமா என்றுமே படங்களை எடுக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டை எப்பொழுதும் வைப்பார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு நெடுநாளாகவே இருக்கிறது. 'கேங்ஸ் ஆப் வாசிப்பூர்' படம் எடுக்க காரணமே சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் தான் என்று அவர் பல நேர்காணலில் கூறியுள்ளார். 'கேங்ஸ் ஆப் வாசிப்பூர் படத்தின்' தொடக்கத்திலே நன்றி மதுரை சாம்ராட் சசிகுமார் என்று தன் அன்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்நிலையில் அனுராக் காஷ்யப் தமிழ் சினிமாவில் களம் இறங்கவுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி. வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் (PAN INDIA MOVIE)வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.