சர்தார் 2 விபத்து எதிரொலி.. சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து
- சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சண்டை கலைஞர்கள் சங்க உறுப்பினர் ஏழுமலை மரணம் அடைந்தார்.
- படப்பிடிப்பில் பணிபுரியும்போது நமது சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "கடந்த 17-ம் தேதி சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சண்டை கலைஞர்கள் சங்க உறுப்பினர் ஏழுமலை மரணம் அடைந்தார்.
படப்பிடிப்பில் பணிபுரியும்போது நமது சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும். ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்க வேண்டும் என்று பலமுறை தொடர்ச்சியாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கிறோம். சில நிறுவனங்கள் தவிர பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை. எனவே நமது இணைக்கப்பட்ட சங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வருகிற 25-ம் தேதி வடபழனி கமலா தியேட்டரில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக 25-7-24 அன்று சென்னை நகரில் சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் நடைபெறாது.
வெளியூரில் நடக்கின்ற அனைத்து படப்பிடிப்புகளிலும் காலை 9 மணி முதல் 10 மணிவரை அனைத்து உறுப்பினர்களையும் படப்பிடிப்பு தளத்துக்கு வரவழைத்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.