சினிமா செய்திகள்

தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை நந்தன் படத்திற்கு வழங்க வேண்டும் - கோபி நயினார்

Published On 2024-09-25 15:32 GMT   |   Update On 2024-09-25 15:32 GMT
  • இன்னும் ஜாதி இருக்கிறதா என கேட்பவர்களுக்கு, என்னுடன் வாருங்கள் இந்தியாவில் ஜாதி இருக்கிறது என்று அழைத்துச் சென்று காட்டுகிறேன்.
  • பள்ளிகளில் மாணவர்களுக்கு நந்தன் திரைப்படத்தை காண வழிவகை செய்ய வேண்டும்.

சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள நந்தன் படத்தை பாராட்டி இயக்குநர் கோபி நயினார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.

அவரது பதிவில், "இந்தியாவில் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டிருக்கும் சனநாயக உரையாடலான, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தை நேர்மையான திரை கதையின் வழியாக தன் சொந்த மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறது "நந்தன்".

இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் நடித்தவர்கள் எல்லோருமே சமூகம் பொறுப்புள்ளவர்களாகவே இருந்தார்கள் என்பதுதான். குறிப்பாக இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி.

"இன்னும் ஜாதி இருக்கிறதா என கேட்பவர்களுக்கு, என்னுடன் வாருங்கள் இந்தியாவில் ஜாதி இருக்கிறது என்று அழைத்துச் சென்று காட்டுகிறேன்..." என்ற வாசகத்துடன் துவங்குகிறது இத்திரைப்படம்.

சனநாயகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட இயக்குநர் இரா. சரவணனின் தைரியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

காலணிக்குள் இன்னும் அனுமதிக்கப்படாத நந்தன் எனும் தேரை, தன் முதுகில் சுமந்து வந்த இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரை, இன்னும் நாடு முழுவதும் கொடியேற்ற முடியாமல், நாற்காலியில் அமர முடியாமல், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நுழைய அனுமதிக்காத படி தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட எண்ணற்ற தலித் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் சார்பாக நெஞ்சுயர்த்தி நன்றியை சொல்லிக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள், நந்தன் எனும் இத்திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால்... தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை நந்தன் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நந்தன் திரைப்படத்தை காண வேண்டிய சமூக அரசியலுக்கான அவசியத்தை உணரும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு அறிவுறுத்தலை வழங்குவது என்பது சமூக நீதியோடு தொடர்புடையது என்பது என் பணிவான கருத்து.

நந்தன் திரைப்படம் சனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் என்பதால் இளம் தலைமுறையினருக்கும் மாணவ மாணவியருக்கும் போய் சேர வேண்டிய அவசியம் கருதி அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வழியாக நந்தன் திரைப்படத்தை காண வழிவகை செய்ய வேண்டும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News