இந்தியன்-2 திரைப்படத்திற்கு இ-சேவை உரிமையாளர்கள் கண்டனம்
- திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கம் கண்டனம்.
- குறிப்பிட்ட பட காட்சிகளை நீக்க கோரிக்கை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தனராஜ் தலைமை வகித்து பேசும்போது.
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2-திரைப்படத்தில் நடிகர் மனோபாலா நடிக்கும் ஒருசில காட்சிகளில் இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ரூ.300 கொடுத்தால் தான் ஆதார் தொடர்பான சேவைகள் செய்ய முடியும் என்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த காட்சிகள் மூலம் இ-சேவை மைய ஆபரேட்டர்களை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மைய தொழில் மீதும், ஆபரேட்டர்கள் மீதும் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் காட்சிகள் இருப்பதால் குறிப்பிட்ட அந்த காட்சியை மட்டும் இந்தியன்-2 திரைப்படத்தில் இருந்து நீக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் படக்குழுவினருக்கும், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.
தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரஞ்சித், நவீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.