என்னை பொருத்தவரை இதுதான் நல்ல படம் - இயக்குநர் ஹெச் வினோத்
- மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
- அவரது முந்தைய படம் 'உடன்பிறப்பே' மிகவும் மிகவும் எமோஷனலான படம்.
இரா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும் புதிய படம் நந்தன். இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் எச் வினோத், "நண்பர் இரா. சரவணன் இப்படத்தை பார்க்க சொல்லி, கடந்த சில மாதங்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன்"
"அவரது முந்தைய படம் 'உடன்பிறப்பே' மிகவும் மிகவும் எமோஷனலான படம், அதனால் அவர் படமே வேண்டாம் என, தவிர்த்து வந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது."
"நான் கிராமத்திலேயே வளர்ந்து இருந்தாலும், இந்த படம் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன். அந்த வகையில், இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது."
"சசிகுமார் பொருட்காட்சியில் வைக்கும் அளவு, சிறந்த மனிதர் என்பதாலோ, சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலோ, இதை சொல்லவில்லை, உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம்," என்று தெரிவித்தார்.