சினிமா செய்திகள்

கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின்

Published On 2024-10-30 06:06 GMT   |   Update On 2024-10-30 06:06 GMT
  • ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
  • முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி தர்ஷன் ஜாமின் கோரியிருந்தார்.

கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.

போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டார்.

ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தர்சனின் தோழி பவித்ரா கௌடாவுக்கு தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி உடலுறவுக்கு ரேணுகாச்சாமி வற்புறுத்தி வந்ததே இந்த கொலைக்கு மூல காரணம் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற தர்ஷனின் கோரிக்கையை ஏற்று 6 மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News