சினிமா செய்திகள்

என் வாழ்க்கையில் மீள முடியாத துயரம் 'வாழை' படம் - மாரி செல்வராஜ்

Published On 2024-07-19 16:27 GMT   |   Update On 2024-07-19 16:27 GMT
  • உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் ‘வாழை’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
  • முதன்முதலாக நான் படம் இயக்க நினைத்தது ‘வாழை’ படம். என்னை பாதித்த கதை இது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி பிரபல இயக்குனராக திகழ்பவர் மாரிசெல்வராஜ். தற்போது 'வாழை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த சிறுவர்கள் ஒரு சிலர் காயத்துடன் தப்பித்தனர். அந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அந்த லாரியில் சின்ன வயதில் மாரி செல்வராஜும் பயணித்து, அந்த விபத்திலிருந்து உயிர் தப்பினார். தன்னுடைய சிறு வயது வாழ்க்கையில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதான் 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தை அவரின் மனைவி திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 23-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் திவ்யா மாரி செல்வராஜ், ஹாட்ஸ்டார் நிர்வாகி கிருஷ்ணன் குட்டி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், ராம், தயாரிப்பாளர் தாணு, ரெட் ஜெயண்ட் செண்பக மூர்த்தி, தயாரிப்பாளர், நடிகர் ஜே.எஸ்.கே., இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்,நடிகர் கலையரசன், நடிகைகள் நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாரி செல்வராஜ் பேசியதாவது:-

முதன்முதலாக நான் படம் இயக்க நினைத்தது 'வாழை' படம். என்னை பாதித்த கதை இது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் இயக்கி கொண்டிருந்தபோதே என் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அப்படிதான் 'வாழை' படம் தொடங்கியது. பா.ரஞ்சித், தாணு ஆகியோருடன் அடுத்ததாக படங்கள் பண்ண இருக்கிறேன்.

நான் பட்ட கஷ்டங்கள் நீங்கள் பட வேண்டும் என நடிகர்களிடம் வேலை வாங்கினேன். கலையரசன் 100 கிலோ, திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கி படத்துக்காக கடுமையாக உழைத்தனர். என் வாழ்க்கையில் மீள முடியாத துயரம் 'வாழை' படம்.

இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News