சினிமா செய்திகள்

முகுந்த் போர் குற்றவாளியா?.. பதில் அளிக்காமல் சென்ற இயக்குநர்- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Published On 2024-11-13 13:05 GMT   |   Update On 2024-11-13 13:05 GMT
  • 'அமரன்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை ஹீரோ சுட்டு கொலை செய்வார்
  • ஆயுதமற்ற-காயமடைந்த எதிரியை கொல்லக் கூடாதென இராணுவ சட்டங்களும், சர்வதேச சட்டங்களும் சொல்கின்றன.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர். தற்பொழுது திரைப்படம் உலகளவில் 250 கோடி ரூபாயை கடந்துள்ளது.

இந்நிலையில் முகுந்த் வரதராஜன் நிராயுதபாணியான நபர் ஒருவரை சுடுவதாக படத்தில் காட்டியிருப்பதன் மூலம் அவர் ஒரு போர்குற்றவாளி என திருமுருகன் காந்தி பேசியதாக தகவல் பரவியது. ஆனால் அதனை திருமுருகன் காந்தி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக திருமுருகன் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சங்கிக்கூட்டம் மாதிரியான முட்டாள் கூட்டத்தை தமிழ்நாடு கண்டதில்லை. 'அமரன்' திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற குற்றவாளி வில்லனை கைது செய்யாமல், 'இந்திய இராணுவத்தின் முகத்தை பார்' என சொல்லி சுட்டுக்கொலை செய்வதாக சினிமா காட்சி அமைத்திருந்தார்கள்.

ஒரு ராணுவம் இப்படியாக ஆயுதமற்ற-காயமடைந்த எதிரியை கொல்லக் கூடாதென்பது இராணுவ சட்டங்களும், சர்வதேச சட்டங்களும் சொல்கின்றன. இதை மீறினால் போர்க்குற்றம் எனப்படும் குற்றச்சாட்டு சுமத்தப்படும், ஆகவே இப்படியான சினிமா காட்சி உண்மையானதா அல்லது சினிமாவிற்காக அமைக்கப்பட்டதா எனும் கேள்வியினை அமரன் திரைப்பட இயக்குனரை நோக்கி எழுப்பினோம். இதற்கு இயக்குனர் பதில் சொல்லாமல் நழுவிவிட்டார். காரணம்,'..முகுந்த் வரதராஜன் இப்படியாக சுடவில்லை, இது என்னுடைய கற்பனை..' என இயக்குனர் சொன்னாரென்றால், முகுந்த் வரதராஜனை குற்றவாளியாக்கியது தான்தான் என பொறுப்பேற்க வேண்டும் என்பதால் அவர் பதில் பேசாமல் கடந்து சென்றுவிட்டார்.

ஆனால், '..முகுந்த்வரதராஜன் ஒரு போர்க்குற்றவாளி..' என விமர்சிக்கப்பட்டதாக சங்கிகளே பொய்-பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். முகுந்த்வரதராஜனை குற்றவாளியாக காட்டி வீடியோ, மீம்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் திரைப்படத்தின் இயக்குனரையும், தயாரிப்பாளரையும் நோக்கி கேள்விகேட்டோம். ஆனால் இக்கேள்விகளை முகுந்த்வரதராஜனை நோக்கி திருப்பி அவரை இழிவுபடுத்துகின்றனர். இதுதான் ஆரிய-சங்கி சூழ்ச்சி.

சங்கிக்கூட்டம் ஒருவரை ஆதரிக்கதென்றால் அவர் தவறானவராக இருப்பார் என்பது தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. இவ்வகையில் 'முகுந்த் வரதராஜன்' பெயருக்கு இழுக்கு தேடிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது பாஜக-குரங்குக் கூட்டம்.

பாவம், முகுந்த்வரதராஜனை சங்கிகளிடத்திலிருந்து யார் காப்பாற்ற போகிறார்களென தெரியவில்லை? ஆகவே நாமே இந்த பொய் செய்தியை அம்பலப்படுத்த வேண்டும்.

இந்த பொய்செய்தியை அம்பலப்படுத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என நம்புகிறேன். உங்களது பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் பொய்செய்திகள் மூலம் எதிர்காலத்தில் வன்முறையை பரப்பும் துணிச்சல் சங்கிகளுக்கு உருவாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News