டி.வி. நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை- நடிகை குட்டி பத்மினி
- இந்த துறையில் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் உள்ளனர்.
- சின்மயி, ஸ்ரீரெட்டி போன்றோருக்கு தடை விதித்து விட்டனர்.
மலையாளத் திரைத்துறையில் புயலை கிளப்பி உள்ள ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகை குட்டி பத்மினி கருத்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது:-
''மலையாள பட உலகில் நடந்துள்ள விஷயங்கள் குறித்து நான் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பே பேசி இருக்கிறேன். அது உண்மைதான். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
அதேபோல் தொலைக்காட்சி தொடர்களில நடிக்கும் நடிகைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். டி.வி. நடிகைகளை ஒப்பந்தம் செய்யும்போது நீங்கள் யாருக்கும் கீழ்பணிய வேண்டாம். ஏதேனும் பிரச்சனை வந்தால் எனக்கு போன் செய்யுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறேன்.
இந்த துறையில் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் உள்ளனர். ஆண்கள் மீது குற்றம் சொல்லும் அதே வேளையில் பெண்களையும் குற்றம் சொல்லுவேன்.
நீங்கள் எதற்காக அதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். முடியாது என்று சொல்ல வேண்டும். சில நேரம் மறுக்கும் நடிகைகளை ஒதுக்கி விடும் நிலைமையும் இருக்கிறது.
சின்மயி, ஸ்ரீரெட்டி போன்றோருக்கு தடை விதித்து விட்டனர்.
பாலியல் சீண்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர்- நடிகைகள் காதல் வயப்படுவது அவர்கள் முடிவு. ஆனால் நடிக்கும் இடத்தில் நீ ஒப்புக்கொண்டால்தான் வேலை கொடுப்பேன் என்று சொல்வது தவறு.
தயாரிப்பு மானேஜர் உள்ளிட்ட சிலரும் பெண்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். போக்சோ சட்டம் மாதிரி வரவேண்டும்.
நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன். அது வெளியாகும்போது பல பெரிய நடிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். 95 சதவீதம் பெண்களை பயன்படுத்தி விட்டு வேலை கொடுப்பது இல்லை. எனக்கும் நடந்து இருக்கிறது.
எனக்கு 10 வயதாகும்போது பெரிய நிறுவனத்தில் ஒருவர் தவறாக நடந்தார். என் அம்மா தட்டி கேட்டதும் வெளியேற்றி விட்டனர்.
சினிமாவில் மட்டுமன்றி சின்னத்திரையிலும் நடிகைகளுக்கு பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும்
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.