சினிமா செய்திகள்

சுயமரியாதை முக்கியம்... பெண் தொகுப்பாளரின் ஆதிக்கத்தால் CWC 5ல் இருந்து விலகிய மணிமேகலை

Published On 2024-09-14 16:16 GMT   |   Update On 2024-09-14 16:16 GMT
  • சுயமரியாதைதான் எனக்கு முதன்மையானது. எனக்கு அது கொடுக்கப்படாத இடத்தில் நான் இருக்கமாட்டேன்.
  • இந்த சீசனில் பெண் தொகுப்பாளர் ஒருவர் தான் ஒரு போட்டியாளர் என்பதையே மறந்து என் பணிகளில் அதிகம் இடையூறு செய்தார்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 5 அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை இதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இனிமேல் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப்போவதில்லை. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேர்மையுடனும், கடின உழைப்புடனும் எனது 100% உழைப்பைப் போட்டு இந்நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன்.

சுயமரியாதையை விட இங்கு எதுவும் பெரிதில்லை. பிரபலம், பணம், வாய்ப்புகள், தொழில் இவையெல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம் தான். சுயமரியாதைதான் எனக்கு முதன்மையானது. எனக்கு அது கொடுக்கப்படாத இடத்தில் நான் இருக்கமாட்டேன். அதன் காரணமாகவே 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சியிருந்து வெளியேறுகிறேன்.

இந்த சீசனில் பெண் தொகுப்பாளர் ஒருவர் தான் ஒரு போட்டியாளர் என்பதையே மறந்து என் பணிகளில் அதிகம் இடையூறு செய்தார். நிகழ்ச்சியில் அவரது ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக எனது உரிமையைக் கேட்பதும், எனக்காக நான் குரல் கொடுப்பதும் இந்நிகழ்ச்சியில் தவறாக மாற்றப்பட்டது. எனக்காக நான் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன். யாருக்காகவும் அதை நான் நிறுத்தமாட்டேன். இப்போது நடப்பது முன்பு இருந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியாக இல்லை.முற்றிலும் வேறானதாக இருக்கிறது.

2010-ம் ஆண்டு முதல் நான் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். எனது 15 ஆண்டுகால இந்தப் பயணத்தில் இப்படியொரு முதிர்ச்சியற்ற நடத்தைகளை நான் பார்த்ததே இல்லை. ஆனால் எனக்கு இதைச் செய்த நபருக்கு நான் இன்னும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் துன்பப்படாமல் இருக்க கடவுள் அவளுக்கு அதிக நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும். வாழுங்கள், வாழ விடுங்கள். என்னை ஆதரித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்காவை தான் மணிமேகலை குறிப்பிட்டு பேசுகிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News