சினிமா செய்திகள்

நடிகர் முகேசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்கள் ஆதரவு

Published On 2024-08-30 09:39 GMT   |   Update On 2024-08-30 09:39 GMT
  • கேரள அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • நடிகர்கள் மீதான போலீஸ் விசாரணை தீவிரமாக தொடங்கி இருக்கிறது.

திருவனந்தபுரம்:

மலையாள திரை உலகில் பாலியல் பலாத்கார அத்து மீறல்கள் அதிகளவு நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை நடத்த கேரள அரசு உத்தர விட்டது. அதன்படி நீதிபதி ஹேமா மலையாள திரையுலகில் நடக்கும் அத்துமீறல்களை ஆய்வு செய்து கண்டுபிடித்து பெரிய அறிக்கையாக தயாரித்தார். கடந்த 2019-ம் ஆண்டு அந்த அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அந்த அறிக்கை வெளி யிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்த அறிக்கையின் ஒரு பகுதி மட்டும் வெளி யானது. அதில் வெளியான தகவல்கள் மலையாள பட உலகை சுனாமியாக சுருட்டி வீசும் வகையில் புயலை கிளப்பி உள்ளது.

நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் மினு குரியன், ஸ்ரீலேகா மித்ரா உள்பட பல நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறினார்கள். நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடைவேள பாபு, சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்பட பலர் மீது பாலியல் பலாத்கார புகார்கள் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மட்டும் 376, 354, 509 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி உள்ளன.

நடிகர் முகேஷ் மீது பதிவாகி இருக்கும் 376-வது பிரிவு கற்பழிப்புக்கான தண்டனை பெற்று தரும் சட்டப்பிரிவாகும். இந்த பிரிவில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளியில் வர இயலாது. இதை அறிந்த நடிகர் முகேஷ் அவசரம் அவசரமாக எர்ணாகுளம் செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அதன் பேரில் செப்டம்பர் 3-ந்தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று எர்ணாகுளம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் நடிகர் முகேஷ் சற்று நிம்மதி பெருமூச்சுடன் இருக்கிறார்.

என்றாலும் நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரளாவில் எதிர்ப்பு வலுக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட மகளிர் அமைப்புகள் முகேசை கைது செய்யக்கோரி தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களும் நடிகர் முகேசை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ், பா.ஜ.க. போர்க்கொடி தூக்கி உள்ளது.

இதற்கிடையே கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடிகர் முகேசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனிராஜா கூறுகையில், "நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க தார்மீக தகுதியை இழந்துவிட்டார். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் மாநில அரசின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

தோழமை கட்சிகள் முகேசை எதிர்ப்பதால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது. என்றாலும் நடிகர் முகேசை ராஜினாமா செய்ய வைத்தால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று பயப்படுகிறார்கள்.

எனவே கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பதிலடி நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளனர்.

கேரள கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டணி அமைப்பாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்தியில், "காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளது. அவர்கள் இதுவரை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தால் முகேசிடமும் அந்த கோரிக்கையை வைக்கலாம்" என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் அனைவரும் நடிகர் முகேசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நடிகர் முகேஷ் விலக மாட்டார் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் கேரள அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மலையாள நடிகைகள் பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அவர்கள் நடிகைகளை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். இதைத்தொடர்ந்து ஆதாரங்களை திரட்டத் தொடங்கி உள்ளனர்.

நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் திருவனந்தபுரத்தில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டை சந்தித்து விளக்கங்களை கொடுத்தனர். நடிகர் சித்திக்குக்கு எதிராக நடிகை தெரிவித்த பாலியல் பலாத்கார புகார் வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

இதன் காரணமாக பாலியல் பலாத்கார விவகாரத்தில் நடிகர்கள் மீது கைது நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நடிகர் முகேஷ் போல நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் ஆகியோர் மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளன. நடிகர் ஜெயசூர்யா மீது 376, 509 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நடிகர் ஜெயசூர்யா மீது இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் நடிகர்கள் மீதான போலீஸ் விசாரணை தீவிரமாக தொடங்கி இருக்கிறது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் புகழ் பெற்ற எழுத்தாளர் பத்மநாபன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நீதிபதி ஹேமா ஆணையம் கொடுத்த அறிக்கையின் அனைத்து பகுதிகளும் வெளியிடப்படவில்லை. இதனால் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்த சின்ன மீன்கள் தான் சிக்கி உள்ளன. பெரிய திமிங்கலங்கள் தப்பி உள்ளன. அறிக்கையின் முழு விவரம் வெளியானால் பல கசப்பான கதைகள் வெளிச்சத்துக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News