சினிமா செய்திகள்
null

"அனிமல்" விமர்சகர்களை பிரித்து மேய்ந்த பிரபல இயக்குனர்

Published On 2023-12-11 10:08 GMT   |   Update On 2023-12-11 10:51 GMT
  • பல்வேறு ஊடக விமர்சகர்கள் "அனிமல்" திரைப்படத்தை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்தனர்
  • விமர்சகர்கள், அனிமல் இயக்குனரிடம் திரைப்பட வகுப்பு பயில வேண்டும் என்றார் ஆர்ஜிவி

கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான இந்தி திரைப்படம் "அனிமல்" உலகமெங்கும் வெளியானது. திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெள்ளித்திரையில் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.

ஆனால், "அனிமல்" திரைப்படத்தை எழுத்து, சமூக, காட்சி உள்ளிட்ட அனைத்துவிதமான ஊடகங்களிலும் பல பிரபல விமர்சகர்கள் கடுமையாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். கதை மற்றும் காட்சி அமைப்புகளில் இளைஞர்களை ஈர்ப்பதற்காக ஏராளமாக வன்முறை சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், தரமான திரைப்படமல்ல என்றும் குறை கூறி இயக்குனரை விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில், "அனிமல்" திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது.

வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக போகும் புதிய திரைப்படங்கள் "அனிமல்" வசூலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தாலும், அதற்குள் இப்படம் மேலும் பல கோடிகள் வசூலில் குவிக்கும் என திரைப்பட வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இப்பின்னணியில் "ஆர்ஜிவி" என அழைக்கப்படும் பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா (Ram Gopal Varma), திரைப்பட விமர்சகர்களை கடுமையாக தாக்கி கருத்து கூறியுள்ளார்.

விமர்சகர்களுக்கு 5 அறிவுரைகளாக ஆர்ஜிவி தெரிவித்திருப்பதாவது:

  • இயக்குனரை காட்டிலும் படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்கள் மீது விமர்சகர்கள் முதல்முறையாக கோபமடைந்திருக்கிறார்கள்.
  • படு மோசம் என வர்ணிக்கப்பட்ட திரைப்படம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக மாறியுள்ளது. இதன் மூலம் விமர்சகர்களின் திரைப்பட விமர்சனம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது உறுதியாகி விட்டது.
  • ரசிகர்களுக்கு விருப்பமானது எது என விமர்சகர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை என்பதும் உறுதியாகி விட்டது.
  • அனைத்து விமர்சகர்களும் கை கூப்பி திரைப்படங்களை வர்ணிப்பது எப்படி என சந்தீப் ரெட்டி வங்காவிடம் கேட்டு கற்று கொள்ள வேண்டும்.
  • விமர்சகர்கள் "அனிமல்" திரைப்படத்தை பல முறை பார்த்து தங்கள் அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.  இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பெண் எம்.பி. ரஜ்சீத் ரஞ்சன் (Ranjeet Ranjan) மாநிலங்களவையில், "இளைஞர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வன்முறை காட்சிகளும் ஆணாதிக்க கதையமைப்பும் அதிகம் உள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு அளிக்கப்பட்டது?" என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News