சினிமா செய்திகள்

நடிகை சாரதா - நடிகை ஷீலா

எனது காலக்கட்டத்திலும் பாலியல் தொடர்பான பிரச்சனை இருந்தது- பழம்பெரும் நடிகை சாரதா

Published On 2024-09-03 02:43 GMT   |   Update On 2024-09-03 02:43 GMT
  • சினிமா துறையை பொறுத்தவரை பாலியல் தொடர்பான பிரச்சனை இல்லாத காலக் கட்டங்களே இல்லை.
  • குற்றம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாலியல் விவகாரம் குறித்து ஹேமா கமிட்டியில் உறுப்பினராக இருந்தவரும், மூத்த நடிகையுமான சாரதா கூறியதாவது:-

மலையாள திரையுலகம் மட்டுமின்றி சினிமா துறையை பொறுத்தவரை பாலியல் தொடர்பான பிரச்சனை இல்லாத காலக் கட்டங்களே இல்லை. எனது காலக்கட்டத்தில் இதுபோன்ற பிரச்சனைகளில் நடிகைகள் மவுனம் காத்தனர். அவமானம், பயம், எதிர்காலம் குறித்தான சிந்தை காரணமாக பலரும் தமக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே சொல்லாமல் மவுனம் காத்தனர். கல்வி அறிவில் சிறந்த தற்போதைய தலைமுறைக்கு அவர்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல எந்த பயமும் இல்லை. ஆனால் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து நடிகர்களுக்கு எதிராக தற்போது நடிகைகள் வெளியிட்டு வரும் குற்றச்சாட்டுகள் வெறும் ஷோ மட்டுமே. சிலர் கூறுவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. தற்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரே விஷயம் வயநாடு பேரிடர் பற்றி மட்டுமே.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மலையாளத்தில் மூத்த நடிகையான ஷீலா கூறியதாவது:-

நடிகைகள் தாங்கள் சந்தித்து வரும் மோசமான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக கூற முன் வரவேண்டும். எனக்கு அதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டது இல்லை. ஆனால் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் நடந்த மோசமான அனுபவங்கள் குறித்து சக நடிகைகள் கூறி இருக்கிறார்கள். அன்றைய காலக்கட்டத்தில் இதுபோல் வெளிப்படையாக கூற வேண்டிய வாய்ப்பு, தேவைகள் இல்லாமல் இருந்தது. எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்களது பெயர்களை மட்டும் குறிப்பிடுவது ஏன்? என்று தெரியவில்லை.

குற்றம் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும். திரைப்பட துறையில் பெண்களுக்காக எத்தனையோ நல்ல செயல்களை நடிகைகளின் பெண்கள் அமைப்பினர் செய்து வருகிறார்கள், அவர்களை பாராட்டுகிறேன். ஹேமா கமிட்டியை அமைத்து, நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக பேச வாய்ப்பு தந்த அரசுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News