அசாம் முதல் மந்திரியிடம் அதிகாலை 2 மணிக்கு போனில் பேசிய ஷாருக் கான் - காரணம் என்ன?
- அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சமீபத்தில் ஷாருக் கான் யார்? என கேட்டிருந்தார்.
- நேற்று அதிகாலை 2 மணிக்கு அவரை நடிகர் ஷாருக் கான் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
கவுகாத்தி:
நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். வரும் 25-ம் தேதி படம் திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது.
அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் காணப்படுகிறார் என சர்ச்சை வெடித்தது. இது இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என பல்வேறு இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது.
இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் இந்து ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பதான் படம் திரையிடப்பட கூடாது என்று திரையரங்க நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றனர். இதேபோல், அசாமில் கவுகாத்தி நகரில் பதான் படம் வெளியாக கூடிய திரையரங்குகளுக்குள் புகுந்த பஜ்ரங் தள அமைப்பினர் போஸ்டர்களை கிழித்து, எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதுபற்றி அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஷாருக் கான் யார்? அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது பதான் படம் பற்றியும் எனக்கு தெரியாது என பதிலளித்து பேசினார்.
மாநில மக்கள் அசாமை பற்றி கவலைப்பட வேண்டும். இந்தி திரைப்படங்களை பற்றி அல்ல. ஷாருக் கான் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஒருவேளை அவர் என்னை தொடர்பு கொண்டால் அதுபற்றி விசாரிப்பேன். சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்பட்டு இருந்தால், வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை அசாம் முதல் மந்திரிக்கு தொலைபேசி மணி அழைப்பு வந்துள்ளது. அதனை எடுத்து பேசியபோது, மறுமுனையில் நடிகர் ஷாருக் கான் அவரிடம் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக, முதல் மந்திரி பிஸ்வா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் என்னை இன்று அதிகாலை 2 மணியளவில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது படம் திரையிடப்பட்டபோது, கவுகாத்தி நகரில் நடந்த சம்பவம் பற்றி வருத்தம் தெரிவித்துப் பேசினார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை என அவருக்கு உறுதி கூறினேன். இதுபற்றி நாங்கள் விசாரணை செய்து, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.