சினிமா செய்திகள்

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு- தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

Published On 2024-02-21 10:15 GMT   |   Update On 2024-02-21 10:15 GMT
  • எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
  • சங்கம், சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும்.

நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளன.

இந்தநிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எம்.நாசர் விடுத்து உள்ள கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தற்போது பொதுவலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ் குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய் கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர்.

எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 

திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூறை அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது.

கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும் கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும் இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்க கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும்.

சட்டரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும் பண்பு மென்மை காரணமாய் பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags:    

Similar News