விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா!
- நண்பர் புதிய பயணத்துக்கு புதிய பாதை போட்டுள்ளார்.
- அரங்கில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி உள்ள இந்த படத்தில் பாபி தியோல், திசா பதானி உள்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம் வருகிற 14 -ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் புரமோஷன் பணிகள் மும்பை, டெல்லி, ஐதராபாத்தில் நடந்தது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் சூர்யா, கார்த்தி மற்றும் பட குழுவினர், திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
நடிகர் ரஜினி வீடியோ மூலம் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். விழாவில் சூர்யா பேசியதாவது:-
அன்பான ரசிகர்கள், அன்பு தம்பிகள், தங்கைகள் அனைவருக்கும் வணக்கம். நான் இருப்பதே உங்களால் தான். எனது நம்பிக்கை நீங்கள் தான்.
என்னுடைய 27 ஆண்டு திரை வாழ்க்கையில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர்கள், அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் பெற்றோர், திரை உலகத்தை சேர்ந்த அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி. உங்களது உடல் நலமும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
மன்னிக்கிற மாதிரி சிறந்த விஷயம் எதுவும் இல்லைன்னு எனக்கு புரிய வைத்தது சிவாதான். அதனால என்ன வெறுப்பை விதைத்தாலும் அன்பை மட்டுமே பரிமாறுவோம். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு உங்க நேரத்தை செலவு செய்ய வேண்டாம்.
என்னுடைய திரை வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தையும், இறக்கத்தையும் எதிர்கொண்டுள்ளேன். அதில் எனக்கு மகிழ்ச்சி தான்.
அதனால் புதிய முயற்சி மேற்கொண்டு நான் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறேன். என் படம் என்ன ஆனாலும் ரசிகர்களிடம் கிடைக்கும் அன்புக்கு எல்லையே இல்லை. நான் படித்த லயோலா கல்லூரியில் என்னுடன் 2 பேர் படித்தார்கள். அதில் ஒருவர் என்னை வைத்து 2 படங்கள் தயாரித்தார்.
அவர் எனக்கு ஜூனியர். அவர்தான் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவரை 'பாஸ்' என்று தான் அழைப்பேன். அவரை எப்போதும் யார் வேண்டுமானாலும் அணுகலாம். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இன்னொரு நண்பர் புதிய பயணத்துக்கு புதிய பாதை போட்டுள்ளார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும் என விஜய் பெயரை குறிப்பிடாமல் சூர்யா பேசினார். இதை கேட்டு அரங்கில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
விஜய் கட்சி மாநாடு இன்று நடைபெறும் நிலையில் சூர்யா வாழ்த்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.