30 நாள் நிபந்தனை ஜாமின்.. போலீஸ் நிலையத்தில் கனல் கண்ணன் நேரில் ஆஜர்
- சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை போலீசார் கடந்த 10-ந்தேதி கைது செய்து ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கனல் கண்ணன் மீண்டும் ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.
அதில், போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோவும் அதன் பின்னணியில் தமிழ் சினிமா திரைப்பட பாடல் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதை பார்த்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விசாரணைக்கு வந்த கனல் கண்ணனை போலீசார் கடந்த 10-ந்தேதி கைது செய்து ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கனல் கண்ணன் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் ஜே.எம்.கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தாயுமானவர் 3 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்த கனல் கண்ணனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவில் அழைத்து வந்தனர். நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கனல் கண்ணன் மீண்டும் ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தாயுமானவர் கனல் கண்ணனுக்கு 30 நாள் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். தினமும் காலை, மாலை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கனல் கண்ணன் இன்று நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் காலை ஆஜரானார். அங்கே அவர் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டார். அவருடன் பா.ஜ.க. இந்து முன்னணி நிர்வாகிகளும் வந்திருந்தனர். பின்னர் கனல் கண்ணன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.