கொலை மிரட்டல் விடுக்கும் என்ஜினீயர்.. பாபி சிம்ஹா பரபரப்பு பேட்டி
- நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார்.
- பாபிசிம்ஹா மற்றும் கே.ஜி.எப். பட வில்லன், நடிகர் ஆகியோர் ஜமீரை மிரட்டியதாக கொடைக்கானலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலை அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்ற காண்ட்ராக்டருடன் ஒப்பந்தம் செய்தார்.
ஜமீரின் உறவினரான காதர் இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பரிந்துரை செய்துள்ளார். பாபிசிம்ஹாவும், காதரும் நண்பர்கள் என்பதால் அதனடிப்படையில் வீடு கட்டி கொடுக்க இருவரும் சம்மதித்தனர். கட்டுமான பணிகள் செய்வதற்காக பாபிசிம்ஹாவிடம் ஜமீர் ரூ.1. கோடியே 70 லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டை கட்டி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
பணிகள் பாதியில் நிற்கவே இதுகுறித்து ஜமீரிடம் கேட்டபோது கூடுதலாக பணம் கொடுத்தால்தான் வீட்டை கட்டி முடிக்கமுடியும் என தெரிவித்துள்ளார். மேலும் கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தி சென்றதால் பாபிசிம்ஹா அதிர்ச்சிஅடைந்தார்.
இதையடுத்து ஜமீர், உசேன், பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் மீது பாபிசிம்ஹா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே பாபிசிம்ஹா மற்றும் கே.ஜி.எப். பட வில்லன், நடிகர் ஆகியோர் ஜமீரை மிரட்டியதாக கொடைக்கானலில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பாபிசிம்ஹா கொடைக்கானலில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது, ஜமீரின் மைத்துனரான காதர் எனது நண்பர். அவர் சொன்னதால்தான் ஜமீருக்கு வீடுகட்ட ஒப்பந்தம் செய்து கொடுத்தேன். ரூ.1.70 கோடி பணம் வாங்கி கொண்டு தரமற்ற கட்டிடப்பணிகளை செய்துள்ளனர்.
பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகள் என்னிடம் கொடுக்கவில்லை. முறைகேடு செய்தது குறித்து கேட்டபோது உள்ளூர் மக்களை திரட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஒரு நடிகரான எனக்கே இதுபோன்ற மிரட்டல்கள் வருகிறது என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும். என சந்தேகம் எழுந்துள்ளது.
பலமற்ற தரைத்தளம்,செட் அமைத்தது போல கட்டிட பணிகளை மோசமான நிலையில் கட்டி கொடுத்துள்ளனர். இதனை நான் புகாராக தெரிவித்தால் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குதொடர உள்ளேன். அங்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். 30 வருடமாக வசித்து வரும் தன்னை கொடைக்கானலை சேர்ந்த சிலர் சமூகஆர்வலர் என்ற பெயரில் கூறிக்கொண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.