சில மருத்துவ கும்பல் பாசத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது.. சூரி காட்டம்
- இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்டரி' படத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார்.
- இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசியது வைரலாகிறது.
மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூரி பேசும்போது, லிங்குசாமி, தான் வெற்றியடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் அசோசியேட்டாக இருப்பவர்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனது கொண்டவர்.
இப்படத்தின் கதையை இயக்குனர் மணிபாரதி கூறும்போது, இதுமாதிரியெல்லாம் இப்போது நடக்கிறதா? என்று கேட்டேன். ஆமாம் தம்பி என்றார். அவர் கதை கூறிய விதத்தைக் கேட்டு எனது கை மட்டும் நீளமாக இருந்திருந்தால் அங்கிருந்தே அவரை கட்டியணைத்திருப்பேன். ஒரு உயிருக்கு பிரச்சினை என்றால் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். அப்பா, அம்மா, தம்பி என்று அவர்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பிரச்சினை என்றால் தவித்துவிடுவோம்.
ஒரு மனிதன் என்றைக்கு வேண்டுமானாலும் இறந்துவிடுவான். அந்த சூழ்நிலையில், ஒன்று கடவுளிடம் நிற்பான், இன்னொன்று மருத்துவரிடம் நிற்பான். அதுதான் உண்மை. அப்படி இருக்கும் பட்சத்தில் சில மருத்துவ கும்பல், நம்முடைய பாசத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது. அதற்கு தீர்வு கொடுக்கும் படமாக இது இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான படம். இன்று இருக்கும் காலகட்டத்தில் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் கலாய்க்கிறார்கள். அதேபோல், முழு படத்தையும் ஈடுபாட்டோடு பார்ப்பதில்லை. பெரிய இயக்குனர்களின் படங்களை அனைவரும் சுலபமாக பார்க்கிறார்கள். ஆனால், புது நடிகர்கள், இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதற்கு தயங்குகிறார்கள். ஆனால், அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று சூரி பேசினார்.