எந்த பின்புலமும் இல்லாமல் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார்.. சரத்குமார் குறித்து வரலட்சுமி நெகிழ்ச்சி
- நடிகை வரலட்சுமி தற்போது 'கொன்றால் பாவம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசியதாவது, "'கொன்றால் பாவம்' உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு முழு நீளமாக நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம் என்று சொல்வேன். நாம் நிறைய படங்களில் நடிப்போம். ஆனால் திருப்தி என்பது சில படங்களில் தான் கிடைக்கும். அப்படியான ஒரு நிறைவு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது. 'விக்ரம் வேதா' படத்திற்கு பிறகு ஒரு மிரட்டலான இசையை இந்த படத்தில் சாம் கொடுத்துள்ளார்.
படத்தின் கதாநாயகன் சந்தோஷ் மிகவும் அமைதியானவர் இந்த 14 நாட்களும் நாங்கள் எல்லாருமே ஒன்றாகவே இருந்து குடும்பம் போலவே ஆனோம். இயக்குனர் தயாள் சாரும் என்னைப் போலவே மிகவும் துறுதுறுப்பாக இருப்பார். மூன்று நான்கு டேக் என்று போகாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகச் சரியாக எடுப்பார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைத்துள்ளார். சின்ன படம் பெரிய படம் என்பதை எல்லாம் தாண்டி கதைக்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன். அப்பாவுக்கும் நன்றி. நான் சினிமாவில் வந்த போது அவர் எனக்கு பின்புலமாக இருந்தார். ஆனால் உண்மையிலேயே எந்த பின்புலமும் இல்லாமல் அவர் இந்த உயரத்தை அடைந்திருப்பது என்பது எனக்கு பெருமையான விஷயம்" என்றார்.