சினிமா செய்திகள்

ஆதிபுருஷ் படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.. அமித்ஷாவிற்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம்

Published On 2023-06-24 10:04 GMT   |   Update On 2023-06-24 10:04 GMT
  • ஓம் ராவத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’.
  • இப்படம் வெளியான நாளில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர். இப்படம் பல எதிர்ப்புகளை சந்தித்திருந்தாலும் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ. 410 கோடியை வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மும்பை காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் "கடந்த ஜூன் 16-ந்தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'ஆதிபுருஷ்' திரைப்படம் பகவான் ராமர், தேவி சீதா மற்றும் ராம பக்தரான அனுமான் ஆகியோரை வணங்கும் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் 

மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முயல்வது ராமாயணத்தின் மீதான எங்கள் நம்பிக்கை குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ், எழுத்தாளர் மனோஜ் முண்டாசிர், இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் ராமாயணத்தை கேலி செய்யும் வகையில் கதைக்களத்தையும், வசனங்களையும், உடை அலங்காரங்களையும் மாற்றி அமைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

இந்து மதம் மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் படத்தின் காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன. நமக்கு பரீட்சையமான ராமாயண கதையை 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் தங்கள் ரசனைக்கு ஏற்ப முற்றிலுமாக திரித்துள்ளனர். எனவே ஆதிபுருஷ் படத்தின் தயாரிப்பாளர் டி-சீரிஸ் பூஷன் குமார், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் எழுத்தாளர் மனோஜ் முண்டாசிர் சுக்லா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.




Tags:    

Similar News