null
டோனி வருகையின் போது ஒலித்த 'நெருப்புடா' பாடல் - அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சி
- ஐபிஎல் தொடரில் குஜராத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் முதன் முறையாக வீழ்த்தியது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் குவாலிபயர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.
டோனி
அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோல்வியடைந்தது. இதன் மூலம் குஜராத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் முதன் முறையாக வீழ்த்தியது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் டோனி மைதானத்திற்குள் நுழைந்தபோது "கொல காண்டுல இருக்கேன்.. கொல்லாம விட மாட்டேன்" என்ற டயலாக்குடன் 'கபாலி' திரைப்படத்தில் அருண்ராஜா காமராஜ் பாடிய "நெருப்புடா நெருங்குடா" என்ற பாடல் ஒலித்து மைதானம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்திலும் ட்ரெண்டானது.
அருண்ராஜா காமராஜ்
இந்நிலையில், இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அருண்ராஜா காமராஜ், "நேர்ல பாக்கலயேங்கற ஒரு சிறு குறை உள்ளுக்குள்ள இருந்தது, ஆனா அது இப்ப இல்ல.. ஒட்டு மொத்த அரங்கும் அதிரும் போது பின்னனி இசையில நம்ம குரல் வரும் போது … ப்பபா… நேர்ல போய் கத்தியிருந்தாலும் இந்த மகிழ்ச்சி வந்துருக்காது .. நன்றி இந்த காட்சிய காண வைத்த அனைவருக்கும்…" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.