அட்லீயை நாம் கொண்டாட வேண்டும்- சிவகார்த்திகேயன்
- ’அயலான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், அட்லீயை கொண்டாட வேண்டும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், "ஜவான் டிரைலர் பார்த்ததும் 'இனி நீ இந்த பக்கம் வரமுடியாது. உன்னை அங்கு கொண்டாடுவார்கள்' என்று அட்லீக்கு நான் செய்தி அனுப்பினேன். ஒரு பக்கம் அட்லீயை சுலபமாக விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர் சாதனை படைக்கும் பொழுது நாம் அதை கொண்டாட வேண்டும்.
மற்ற துறைகளில் அவர்களுடைய இயக்குனர்கள் இவ்வாறு செய்திருந்தால் கொண்டாடுவார்கள். ஒருவர் தமிழில் இருந்து சென்று ஷாருக்கானை வைத்து படம் எடுத்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பது விளையாட்டான விஷயம் இல்லை. அவர்கள் துறை இயக்குனர்களே இதை சாதிக்க முடியவில்லை. ஆனால், இங்கிருந்து சென்ற இயக்குனர் அதை செய்திருக்கிறார் என்றால் அதை கொண்டாட வேண்டும்" என்று பேசினார்.