கவுதமியிடம் ரூ.7 கோடிக்கு மேல் ஏமாற்றிய தொழில் அதிபர்கள்.. கமிஷனர் அலுவலகத்தில் புகார்
- திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கவுதமி.
- இவர் கடந்த 1990-ம் ஆண்டு 10 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் நானும் எனது தாய் வசுந்தராதேவியும் கடந்த 1990-ம் ஆண்டு 10 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். எனது தாய் 2000-ம் ஆண்டில் இறந்துவிட்டார். இந்த நிலத்தில் 8.16 ஏக்கர் நிலம் எனது பெயரில் இருந்தது.
இந்நிலையில், வேளச்சேரியை சேர்ந்த அழகப்பன் மூலம் அண்ணாநகர் 6-வது அவென்யூவை சேர்ந்த தொழில் அதிபர் பலராமன் மற்றும் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் நம்பிக்கையான நபர்கள் என்பதால் எனது பெயரில் உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக உறுதி அளித்தனர். அதனால் அந்த நிலத்தை கடந்த 2015-ம் ஆண்டு பலராமன், ரகுநாதன் ஆகியோருக்கு தனி பொது அதிகார ஆவணம் எழுதி கொடுத்தேன். பிறகு இந்த இடத்தை தனியார் நிறுவனம் வாங்க விரும்புவதாக கூறினர்.
மேலும், நிலத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2 தவணையில் பணத்தை கொடுத்துவிட்டு கையெழுத்து பெற்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ.11,17,38,907-க்கு விற்பனை செய்ததில் கேப்பிட்டல் கெய்ன்ஸ் டெக்ஸ் ரூ.2,61,25,637 வருமான வரி கட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு எனது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதை கண்டு நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
இதுகுறித்து நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நிலம் விற்பனை தொகையில் 25 விழுக்காடு ரூ.2,61,25,637 கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நான் ரூ.65,31,500 கட்டியுள்ளேன். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
பின்னர் எனது சொத்தை விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை சுங்கு வார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து பார்த்த போது தான், நிலத்தை விற்பனை செய்யபவர் ஏஜென்டாக இருந்த பலராமன், ரகுநாதன் ஆகியோர் கடந்த 6.1.2016-ம் ஆண்டு 8.16 ஏக்கர் நிலம் விற்பனை செய்ததன் மூலம் ரூ.11,17,38,907 பணம் பெற்றுள்ளனர். அதில் ரூ.4.10 கோடி மட்டும் பணத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.7,07,38,908 பணம் கொடுக்காமல் இருவரும் பரித்து கொண்டு ஏமாற்றி விட்டனர். எனவே இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு நடிகை கவுதமி புகார் அளித்துள்ளார்.
புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு-2 துணை கமிஷனர் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
நடிகை கவுதமி, ஸ்ரீபெரும் புதூரில் உள்ள ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏமாற்றிவிட்டதாக ஏற்கனவே தொழில் அதிபர் அழகப்பன் மீது புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.