null
விவேக், மயில்சாமி, மனோபாலா என அடுத்தடுத்த இறப்புகள் கொடுமையானது.. பிரபலங்கள் இரங்கல்
- மனோபாலாவின் திடீர் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- மனோபாலா மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகரும், அருமை நண்பருமான மனோபாலா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. 1982-ல் 'ஆகாய கங்கை' திரைப்படத்தை இயக்கி, கலைப்பயணத்தை துவங்கிய அவரது மொத்த இயக்க படங்கள் 24–இல் நான் நடித்த 'வெற்றிப்படிகள்' திரைப்படமும் ஒன்று.
நட்புக்காக, சமுத்திரம், திவான், காஞ்சனா, சென்னையில் ஒரு நாள், வைத்தீஸ்வரன் உட்பட பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை இப்போது நினைவுகூர்கிறேன். தமிழ்த் திரையுலகில் தனி அடையாளத்தை நிரூபித்து, ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி பிரிந்திருக்கும் மனோபாலாவின் மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், எனது அன்பு நண்பர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
இயக்குனர் டி.ராஜேந்தர், இயக்குநரும் நடிகருமான மனங்கவர் மனோபாலா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது. அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லதாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நடிகர் சூரி, "திறமையான இயக்குனர், கனிவான தயாரிப்பாளர், அருமையான நடிகர், அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த மனிதர் மனோபாலா. அவர்கள் இறப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு.
கவிஞர் சினேகன்: இயக்குநர், எழுத்தாளர், நடிகர் மாமனிதர் அண்ணன் மனோபாலாவின் மறைவு என்பது மனம் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் இழப்பாகவே நீள்கிறது. தம்பி என்று அவர் அழைக்கும்போது ஒரு தாய்மையின் உணர்வு தலைத்தூக்கி நிற்கும். மரணம் சில நேரங்களில் இப்படிதான் தவறு செய்துவிடுகிறது.
நடிகர் தம்பி ராமையா: மனோபாலாவின் இழப்பு, மிகப் பெரிய இழப்பு. அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படாதவர் மனோபாலா. உழைக்காமல் அவரால் இருக்க முடியாது. விவேக், மயில்சாமி, மனோபாலா என அடுத்தடுத்த இறப்புகள் கொடுமையானது.
நடிகர் சிங்கமுத்து: மனோபாலா எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்; வரிசையாக சினிமா பிரபலங்கள் உயிரிழப்பது வருத்தமாக உள்ளது. எல்லாருக்காகவும் முன்நின்றவர் அவர்.
நடிகர் கார்த்தி: இந்தச் செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். எல்லா இடங்களிலும் எல்லாருக்காகவும் இருந்த ஒரு மனிதர். உங்களை மிஸ் செய்கிறேன் மனோபாலா என்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.