இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட கபிலன் வைரமுத்து எழுதிய "ஆகோள்"
- கபிலன் வைரமுத்து எழுதிய "ஆகோள்" இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்.
- ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவாக உருவாகியுள்ளது.
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைர முத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920-ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது.
ஆகோள் குறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில், சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளை களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்டது. எதிராளியின் வளங்களில் ஒன்றைக் களவாடும் செயல் என்ற பொருளில் என் நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பட்டிருக்கிறேன். இந்த கதையில் இடம்பெறும் தொழில்நுட்ப களம் குறித்தும், நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு போராட்டம் குறித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு இது பயனுள்ள பயணமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.