null
இயக்குனர் பாலாஜி மோகன்- தன்யா திருமணம்.. அவதூறு பரப்பிய தெலுங்கு நடிகைக்கு தடை விதித்த நீதிமன்றம்
- 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பாலாஜி மோகன் இயக்குனராக அறிமுகமானார்.
- பாலாஜி மோகன்-நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் தகவல் பரவியது.
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பாலாஜி மோகன் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த 'வாயை மூடி பேசவும்', தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'மாரி', தனுஷ்-சாய் பல்லவியின் நடிப்பில் மாரி 2 ஆகியப் படங்களை இயக்கினார். அதோடு மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' படத்தையும் தயாரித்தார்.
2012-ல் தனது முதல் படத்தை இயக்கும் போது அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்தத் திருமணம் பின்னர் விவாகரத்தில் முடிந்தது. இதற்கிடையே, தெலுங்கு தொலைக்காட்சி நடிகை கல்பிகா கணேஷ், பாலாஜி மோகன்-நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் தெரிவித்தார். அதோடு அவர் தனது மனைவியை கட்டுப்படுத்துவதாகவும், குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ள எனக்கும், '7 ஆம் அறிவு', 'ராஜா ராணி' ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணாவுக்கும் கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் நடந்தது. வெப் தொடர்களில் நடித்து வரும் தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ், எங்களின் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அதை அவர் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார். அதோடு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதாடினார். பின்னர் டைரக்டர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த கல்பிகா கணேஷுக்கு நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு ஜனவரி 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.