சினிமா செய்திகள்

எங்கள் படத்தின் மிகப்பெரிய பலம் பவதாரிணி- இயக்குனர் ஈசன்

Published On 2024-02-01 06:53 GMT   |   Update On 2024-02-01 06:53 GMT
  • பாடகி பவதாரிணி சமீபத்தில் காலமானார்.
  • 'புயலில் ஒரு தோணி’ திரைப்படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சமீபத்தில் காலமானது திரைத்துறைக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு. சமீபத்தில் அவர் கடைசியாக இசையமைத்த திரைப்படம் தான் 'புயலில் ஒரு தோணி'. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார்.

'புயலில் ஒரு தோணி' படத்தின் இயக்குனர் ஈசன் பேசியதாவது, பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.


நான் முழுபடத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் தான் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்கு கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.

இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை  ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும், பின்னனி இசை மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்துள்ளார்.



படம் வெளிவருவதற்கு முன்பாக இவ்வாறு நிகழும் என்று துளியலவும் நினைத்து பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிக பெரியப் பலம் அவர், பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைரக்கல். எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம் என்று கூறினார்.

Tags:    

Similar News