சமூக நீதிக்காக போராடுவதும், எதிரானவர்களை எதிர்ப்பதும் தமிழ்நாட்டில் மட்டும் தான்.. இயக்குனர் வெற்றிமாறன்
- நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
'கர்ணன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தில் தலைவருமான கமல்ஹாசன், இயக்குனர்கள் பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, நடிகர்கள் வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, "சமூக நீதியை பேசுகிற படங்களை எடுத்து, சமூக நீதிக்காக போராடுவதும், சமூக நீதிக்கு எதிரானவர்களை எதிர்ப்பதும் தமிழ்நாட்டில் மட்டும் தான். மாமன்னன் என்கிற தலைப்பின் கதாப்பாத்திரத்தை வடிவேலு நடித்திருக்கிறார். நாம் எல்லோரும் அவருடைய காமெடியை ரசித்திருப்போம். அவரை இப்போது சீரியஸான நடிப்பில் பார்க்கப்போகிறோம். வடிவேலுவின் நிலப்பரப்பை மையப்படுத்திய வசனங்களால் ஒரு ஊரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார். சமூக நீதியை சினிமா பேசியதால் தான் நீதி கிடைக்கிறது" என்று அவர் கூறினார்.