null
பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது
- பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் கைது.
- பாண்டிச்சேரியில் வைத்து கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
1991-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் படத்தின் மூலம் திரையுலகிற்கு திரைப்பட சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதன்பின்னர் நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வப்போது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் பெரும்பாளான படங்களுக்கு இவர் பணியாற்றி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கனல் கண்ணன், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர்.
அதன்பின்னர் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.