என் குடும்பத்தில் நான்தான் வித்யாசமானவள் - நடிகை பவானி ஸ்ரீ
- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படம் குறித்து நடிகை பவானி ஸ்ரீ பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம் நாளை (31.03.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விடுதலை படம் குறித்து நடிகை பவானி ஸ்ரீ கூறியதாவது, "பணிக்காக கிராமத்திற்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிளுடன் அழகான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வெற்றிமாறன் சாருடன் பணிபுரிவது என்பது எந்த நடிகருக்கும் நீண்ட நாள் கனவு, நானும் இதற்கு விதிவிலக்கல்ல. என்னுடைய இரண்டாவது படத்திலேயே அது நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தில் நான் கமிட் ஆன போது நான் அனுபவித்த அதே உற்சாகம் இப்போதும் இருக்கிறது. வெற்றிமாறன் சார் சிறந்த இயக்குநர். தனித்துவமான கதைகளை உருவாக்குபவர்.
மேலும் அவர் கதையில் வரும் கதாபாத்திரங்களை உருவாக்கும் விதமும் தனித்துவமானது. ஒரு சிறந்த இயக்குநர் என்பதையும் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். அடர்ந்த காடுகளுக்குள் படப்பிடிப்பு நடந்தபோது அங்கிருக்கும் ஒரு செடி, பூச்சி கூட தொந்தரவு செய்யாதபடி பார்த்துக் கொள்ள விரும்பினார். இது எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் சூரி சார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்து இந்தப் படத்தில் தீவிரமான கதையின் நாயகனாக அவர் மாறியிருப்பது அவருக்கு பாராட்டுகளை குவிக்கும்".
இசை மேதைகளின் குடும்பத்தைச் சேர்ந்த பவானிக்கு 'விடுதலை'யில் ஒரு பாடலைப் பாட வேண்டும் என்ற ஆசை இருந்ததா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் புன்னகையுடன் மறுத்தார். "இல்லை! என் குடும்பத்தில் நான்தான் 'ODD ONE'. எனது குடும்பத்தினர் என்னிடம் வற்புறுத்திய போதிலும், நான் இசைப் பயிற்சியை சரியாக மேற்கொள்ளவில்லை.
மேலும் "நான் இன்னும் படத்தை முழுதாக பார்க்கவில்லை. ஆனாலும், படக்குழுவில் படம் பார்த்த அனைவரும் 'விடுதலை' நன்றாக வந்திருப்பதாகத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். பார்வையாளர்களுடன் படத்தைத் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகளை நிச்சயம் பார்வையாளர்கள் மதிப்பார்கள். எண்டர்டெயின்மெண்ட் என்பதையும் தாண்டி, நல்ல படங்கள் வரும்போது அதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள். நிச்சயம் அது 'விடுதலை' படத்திற்கும் நடக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.