வியப்பில் ஆழ்த்தும் படைப்புகளை பார்க்க ஆவலோடு இருக்கிறேன் - யுவன் சங்கர் ராஜா
- இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
- இத்திரைப்பட திருவிழாவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடங்கி வைத்தார்.
இதய ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக உலக இதய தின அனுசரிப்பு நாளன்று இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் ஒருமாத காலம் நடைபெறும் பரப்புரை திட்டமானது செப்டம்பர் 10-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. இச்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்வமுள்ள திரைப்பட படைப்பாளிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்பதற்கு ஒரு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை நடுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு பிரிவினராலும் வழங்கப்படும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.100,000 இரண்டாவது பரிசாக ரூ.50,000 மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.25,000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இத்திரைப்பட திருவிழாவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடங்கி வைத்தார். திரைப்பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் திரைப்பட எடிட்டர் ஆர்.கே. செல்வா ஆகியோர் இத்தொடக்கவிழா நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது, "சிந்தனையை தூண்டிவிடுகின்ற, சிறப்பான குறும்படங்களின் மூலம் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக வளர்ந்து வரும் திரைப்படைப்பாளிகளின் படைப்புகளைப் பார்க்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன். உங்களது முழு திறனையும், ஆற்றலையும், அறிவையும் சிறப்பாக வெளிப்படுத்துமாறு ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க நான் விரும்புகிறேன்.
இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்பு அச்சுறுத்தும் விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இளவயதிலேயே இதயநோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட வேண்டும். சமூக விழிப்புணர்விற்கான இந்த சிறப்பான செயல்திட்டத்தை நிஜத்தில் செயல்படுத்த உதவியிருக்கின்ற அனைவருக்கும் எனது நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்," என்று பேசினார்.