படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளருடன் திடீர் மோதல்.. விளக்கம் கொடுத்த ஜோஜு ஜார்ஜ்
- நடிகர் ஜோஜு ஜார்ஜ் ‘பனி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.
sமலையாளத்தில் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுசுடன் ஜெகமே தந்திரம், பபூன் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். இவர் தற்போது 'பனி' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகுகிறார். இதில், அபிநயா, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, ஆபிரகாம் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், 'குணா', 'மின்சார கனவு', 'அன்பே ஆருயிரே' போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இதில் பணியாற்றி வந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் வேணு அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் இதனால் ஜோஜு ஜார்ஜுக்கும் வேணுவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல், வேணுவை நீக்கிவிட்டு வேறொரு ஒளிப்பதிவாளரை வைத்து படத்தைத் ஜோஜு ஜார்ஜ் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இது முற்றிலும் வதந்தி என ஜோஜு ஜார்ஜ் கூறியுள்ளார். அதாவது, "மலையாள சினிமாவில் நான் மதிக்கும் பல நபர்களில் வேணுவும் ஒருவர். நாங்கள் அவரை நீக்கவில்லை. அவராகதான் சென்றார். இன்றும் அவர் மீது எனக்கு அதே மரியாதை உள்ளது. இந்த படத்தை இயக்க சொன்னதே வேணு சார் தான். தயவு செய்து இது மாதிரியான வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.