null
உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு- கமல் இரங்கல்
- கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
- இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார். அவரது மறவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தேசியத்தின் மேல் பெரும்பற்றும் மாநில வளர்ச்சியில் மாளாத அக்கறையும் கொண்டு மிக நீண்டகாலம் வெற்றிகரமான அரசியல் பணி செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர் உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.