கல்வி இருந்தா போதும் ஒருதலைமுறையே முன்னேறும்- கார்த்தி பேச்சு
- சிவகுமார் அறக்கட்டளை பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறது.
- இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
பழம்பெரும் நடிகரான சிவகுமார் 1979-ல் தனது 100- வது படத்தின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதை நடிகர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். பின்னர் 1980 முதல் ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பெற்றோரை இழந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகையை சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசியதாவது, "இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிகிறது. அனைவரும் படிக்கிறார்கள். அப்பா, அம்மா ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதித்தால் கூட அதை சேர்த்து வைத்து குழந்தையை படிக்க வைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு கல்வி அவசியமாக இருக்கிறது.
ஒருவர் படித்து விட்டால் அவருடைய தலைமுறையே நன்றாக இருக்கும். கல்வியை கொடுத்தால் அதை விட பெரிய செல்வம் எதுவும் இல்லை. அதை கொடுத்தால் ஒரு தலைமுறையே மேலே வந்துவிடும் என்றால் அதற்கு இந்த தலைமுறை தான் உதாரணம். சிவகுமார் அறக்கட்டளையை 25 வருடங்கள் நடத்தி முடித்து விட்டு அகரம் அறக்கட்டளையிடம் கொடுத்தார்கள். தொடர்ந்து 44 வருடங்கள் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களால் எது வேண்டுமானாலும் சந்திக்க முடியும், சாதிக்க முடியும். உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள்" என்று கூறினார்.