சினிமா செய்திகள்

மறைந்த நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

Published On 2023-05-04 06:07 GMT   |   Update On 2023-05-04 06:07 GMT
  • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா நேற்று காலமானார்.
  • இவரது இறுதி ஊர்வலம் சென்னை சாலிகிராமத்தில் இருந்து தொடங்கியது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.



இவர் அரண்மனை, டான், துப்பாக்கி, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிதாமகன் படத்தில் நடித்திருந்த கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக மனோபாலா பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆகாய கங்கை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக மனோபாலா அறிமுகமானார். ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கிய மனோபாலா பிள்ளை நிலா, சிறைபறவை, மூடு மந்திரம், கருப்பு வெள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



இவரது உடலுக்கு திரைபிரலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சமூக வலைத்தளத்தின் வாயிலாகவும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

அஞ்சலிக்குப் பிறகு இன்று காலை  11.30 மணியளவில் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து தொடங்கியது. இவரது உடலுக்கு பொது மக்கள் வழி நெடுங்கிலும் நின்று மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

Tags:    

Similar News