ரூ.100 கோடி செலவில் விஷாலை வைத்துதான் படம் எடுக்க வேண்டுமா? மன்சூர் அலிகான் கேள்வி
- நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சரக்கு’.
- இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் 'சரக்கு' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மன்சூர் அலிகான், "சின்ன படங்களை எடுத்துக் கொண்டு வராதீர்கள் நஷ்டம் ஏற்படுகிறது என்று விஷால் சொன்னது தவறு, அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விஷால் நடிகர் சங்க தலைவராக அப்படி சொல்லக் கூடாது. ஏதோ அவர் பட்ட அனுபவத்தில் சொல்கிறார். ரூ.100 கோடி வைத்துக் கொண்டு விஷாலை வைத்து தான் படம் எடுக்க வேண்டுமா? நடிகர் சங்கத்தில் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும்.
சித்தா என்ற படம் ரூ.3 கோடி செலவில் எடுக்கப்பட்டது தான், அது நன்றாக ஓடியது. அதுப்போலதான் ரூ.50 லட்சம் கொண்டு ஒருவர் சமூகத்தால் வரவேற்கும் படத்தை கொடுக்கலாம். அதனால் விஷால் பேசியது தவறு. பான் இந்தியா திரைப்படமாக எடுத்தால் தான் சினிமா பார்க்க வேண்டும் என்பது இல்லை. சரக்கு மிகச்சிறந்த திரைப்படம் நல்லா இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தணிக்கைக்குழுவில் அம்பானி சொல்லாதே, அதானி சொல்லாதே என்று கூறுகின்றனர்" என்று பேசினார்.