சினிமா செய்திகள்

உடல்நிலை சரியானதும் நேரில் ஆஜராகிறேன்.. நமீதாவின் கணவர் போலீசுக்கு கடிதம்

Published On 2023-11-15 09:31 GMT   |   Update On 2023-11-15 09:31 GMT
  • முத்துராமன், கோபால்சாமியிடம் ரூ.3 கோடி தந்தால் தமிழ்நாடு அரசில் உயர்பதவி வாங்கி தருவதாக கூறி உள்ளார்.
  • அரசு முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

சேலத்தைச் சேர்ந்த கோபால்சாமி என்பவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் மற்றும் முபாரக் ஆகியோர் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பின் தேசிய தலைவர் என தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.

அப்போது முத்துராமன், கோபால்சாமியிடம் ரூ.3 கோடி தந்தால் தமிழ்நாடு அரசில் உயர்பதவி வாங்கி தருவதாக கூறி உள்ளார். இதை உண்மை என்று நம்பி கோபால்சாமி 2 தவணைகளில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முத்துராமனின் நண்பர் துஷ்யந்த் யாதவ் என்பவரிடம் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்று கொண்ட அவர்கள் அரசு பதவி வாங்கி தரவில்லை. இதையடுத்து கோபால்சாமி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். கடந்த வாரம் சேலத்தில் எம்.எஸ்.எம்.இ. புரொமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன், செயலாளரான துஷ்யந்த் யாதவ், தமிழக தலைவர் நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தெரியவந்ததும் சூரமங்கலம் போலீசார் விரைந்து சென்று முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அரசு முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே வீரேந்திர சவுத்ரி சேலம் போலீசாருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் தனக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் விசாரணைக்கு வர முடியவில்லை. உடல்நிலை சரியானதும் விசாரணைக்கு ஆஜராக வருவதாக தெரிவித்து இருந்தார். இதற்கிடையே இந்த மோசடி வழக்கு சூரமங்கலம் போலீசில் இருந்து சேலம் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News