சினிமா செய்திகள்

பி.சி. ஸ்ரீராம்- சேரனுக்கு விருது வழங்கி கவுரவித்த நண்பன் குழுமம்

Published On 2023-08-05 09:07 GMT   |   Update On 2023-08-05 09:07 GMT
  • நண்பன் நிறுவனத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.
  • இதில், விருதாளர்கள் அனைவருக்கும் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்'ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழா மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, பியானோ லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நாசர் பேசியதாவது, '' உலகில் இருக்கும் உன்னதமான உறவு நட்பு. உன்னதமான நட்பை ஒரு தத்துவமாக்கி, அதனை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதற்காகவும் நம் மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதற்காகவும் முதலில் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வெள்ளைக்காரன் ஒரு விசயத்தைச் செய்தால் அதை உடனடியாக எழுதி வைத்து விடுவார். ஆனால் நாம் பல விசயங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நண்பனிசம்- விளக்கம் தேவையற்ற ஒரு தத்துவம். நட்பிற்கு விளக்கம் தேவையில்லை. அந்த ஒரு எளிய உறவை.. உணர்ச்சியை... உன்னதமான உணர்ச்சிகளாக்கி உலகம் முழுவதும் பரப்புகின்ற உங்களுக்கு இந்த அரங்கத்தில் உள்ள அனைத்து நண்பர்களின் சார்பாகவும் நட்பைக் காணிக்கையாக்குகிறேன்.


நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக நினைக்கிறேன். நட்புடன் இருப்போம் நண்பர்களாகவே இருப்போம். இங்கு விருது பெற்ற கலைஞர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள் தான். நான் வாழ்க்கையில் என்ன ஆவேன் என தெரியாமல் இருந்த காலகட்டத்திலிருந்து என்னை வழிநடத்தியவர்கள். கவிஞர் அறிவுமதி, நான் படத்தை இயக்கும்போது அவராகவே முன்வந்து உதவி செய்தவர். பேராசிரியர் ராமசாமி அவருக்கும் எனக்குமான நட்பு புதிரானது. ஓவியர் டிராட்ஸ்கி மருது இல்லையென்றால் எனக்கு எழுதவே வந்திருக்காது. " என்றார்.


மேலும், இயக்குனர் சேரன் பேசியதாவது, '' நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் குழுமம் செய்கிறது. அதனால் இவர்கள் ஒரு குட்டி அரசாங்கம். நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வருவதும், சமூகத்துக்குத் தேவையான உதவி செய்து வருவதை வாழ்த்துவதிலும், வரவேற்பதிலும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது பி.சி. ஸ்ரீராம் சொன்னது போல், அடுத்தடுத்து தொடர்ந்து ஓடுவதற்கு அளிக்கப்பட்ட ஊக்க மருந்தாக எடுத்துக் கொள்கிறேன். நண்பன் குழுமம் அனைவருடனும் இணைந்து தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.


இந்த விழாவில், நண்பன் க்ராஃப்ட் மாஸ்டர்ஸ் விருது இயக்குனர் பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் சேரன், கலை இயக்குனர் முதுதுராஜ், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதற்கு முன்னதாக கலை மற்றும் பண்பாட்டு துறையில் சிறந்த சேவை செய்துவரும் கலைஞர்களான ஓவியர் ட்ராஸ்ட்கி மருது, பேராசிரியர் மு ராமசாமி, கவிஞர் அறிவுமதி, புரிசை கண்ணப்ப சம்பந்தம், பெரிய மேளம் கலைஞர் முனுசாமி ஆகியோருக்கு நண்பன் விருது வழங்கப்பட்டது. இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஆகியோர் வழங்கினர்.


இவர்களைத் தொடர்ந்து நண்பன் டேலண்ட் கேட்வே விருதினை அறிமுக படைப்பாளிகளான கணேஷ் கே பாபு, விக்னேஷ் ராஜா, விநாயக் சந்தரசேகரன், முத்துக்குமார், மந்திரமூர்த்திக்காக அருவி மதன் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இந்த விருதினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, செயலாளர் கதிரேசன், நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், இயக்குனர் சேரன் ஆகியோர் வழங்கினர். விருதாளர்கள் அனைவருக்கும் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News