நர்சுகளை வர்ணித்து பேசிய பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா.. கிளம்பிய புது சர்ச்சை..
- நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நர்சுகளை வர்ணித்து சில கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது.
- அவரது பேச்சுக்கு ஆந்திர மாநில நர்சுகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவின் பிரபல நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வாக இருந்தவர். தனியார் டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக நடிகர் பாலகிருஷ்ணா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஜனசேனா கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். விவாத நிகழ்ச்சியின்போது பவன் கல்யாண் மகன் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கியது குறித்து பேசினார்.
அப்போது நடிகர் பாலகிருஷ்ணா தானும் கல்லூரியில் படிக்கும் போது விபத்தில் சிக்கி ரத்தம் கொட்டியதால் சிகிச்சைக்காக தனது நண்பர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் விபத்தில் காயம் ஏற்படவில்லை, கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கூற வேண்டும் என தெரிவித்தனர்.
ஆனால் எனக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் மிகவும் அழகாக இருந்ததால் அவரிடம் உண்மையை மறைக்க முடியவில்லை என தெரிவித்தார். அப்போது அவர் அழகை வர்ணித்து சில கருத்துகளை பேசியதாகவும் கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு ஆந்திர மாநில நர்சுகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, அவர் பேசிய பேச்சை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நடிகர் பாலகிருஷ்ணா உடனடியாக மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து அவர் அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "எனது பேச்சை திரித்து சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர். நர்சுகளின் சேவைகள் விலை மதிப்பற்றது. நர்சுகளை நான் என்னுடைய சகோதரிகளாக மதிக்கிறேன். பல உயிர்களை காப்பாற்றுவது நீங்கள் தான். கொரோனா காலகட்டத்தில் இரவு பகலாக உணவு, தண்ணீர் என்று பாராமல் கடுமையாக உழைத்தவர்கள் நீங்கள். உங்கள் மனது புண்படும்படி பேசி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.