ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த நயன்தாரா படக்குழு
- நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.
- இவர் தற்போது இயக்கியுள்ள கோல்டு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கும் படம் 'கோல்டு'. பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு 'கோல்டு' திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 'கோல்டு' திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது, எங்கள் தரப்பில் வேலை தாமதம் காரணமாக 'கோல்டு' திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து வெளியாகிறது. தாமதத்திற்கு எங்களை மன்னியுங்கள். 'கோல்டு' வெளியாகும் போது இந்த தாமதத்தை எங்கள் வேலையின் மூலம் ஈடுசெய்வோம் என்று நம்புகிறோம் என இயக்குனர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.