தமிழ் சினிமாவில் அந்த மாதிரி படங்களுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது - சாம் சி.எஸ்.
- டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
- கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள 'கார்டியன்' படம் மார்ச் 8-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, 'மொட்டை'ராஜேந்திரன், பிரதீப் ராயன்,'டைகர் கார்டன்' தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே.ஏ.சக்திவேல் மேற்கொள்ள படத்தொகுப்பாளராக எம். தியாகராஜன் பணியாற்றியுள்ளார்.
குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி இருக்கும் கார்டியன் படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ். "சமீப காலத்தில் ஹன்சிகா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது."
"முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்சிகாவும் ஒருவர். மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார்."
"இந்த படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும் உருவாகியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணிபுரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளியாகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது", என்று தெரிவித்தார்.