சினிமா செய்திகள்

கற்பூரம் ஏற்றவில்லையென்றால் நாம் தீவிரவாதி ஆகிவிடுவோம்- பா.இரஞ்சித் ஆவேசம்

Published On 2024-01-22 11:46 GMT   |   Update On 2024-01-22 11:46 GMT
  • 'புளூ ஸ்டார்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.


'புளூ ஸ்டார்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித், "இன்று முக்கியமான நாள், வீட்டில் சென்று கற்பூரம் ஏற்றவில்லையென்றால் நாம் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5 - 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப்போகிறோம் என்கிற பயத்தை உணர்த்துகிறது.

அதுபோன்ற காலக்கட்டத்தில் நுழையும் முன்பு நம் மூளையில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும் தினம் தினம் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கிற மதவாதத்தையும் அழிக்க நம்மிடம் இருக்கும் கலை என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி வருகிறோம். மக்களை சரி செய்வதற்கான சக்தி இதற்கு உள்ளது என நம்புகிறேன்" என பேசினார்.


மேலும், "இன்று ராமர் கோவில் திறப்பை ஒட்டி அதன் பின்னால் நடக்கும் மத அரசியலை நாம் கவனிக்க வேண்டும். மதசார்பற்ற இந்தியா எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுப்பும் நிலை உள்ளது. இப்போது கோவில் கூடாது என்பது நம் பிரச்சனை இல்லை. ரஜினி ராமர் கோவிலுக்கு சென்றது அவருடைய விருப்பம். இது தொடர்பான கருத்துகளை அவர் முன்பே கூறியிருக்கிறார். இப்போது அவருடைய கருத்துப்படி 500 ஆண்டுகள் பிரச்சனை தீர்ந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது" என்று பேசினார்.

Tags:    

Similar News