மாஸ்டர் மகேந்திரனிற்குள் சினிமா ஊறியிருக்கிறது.. 'ரிப்பப்பரி'இயக்குனர் புகழாரம்
- இயக்குனர் அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரிப்பப்பரி’.
- இப்படத்தில் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரிப்பப்பரி'.மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
AK THE TALESMAN நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு திவாரகா தியாகராஜன் இசையமைக்க தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில், மாஸ்டர் மகேந்திரன் பேசியதாவது, இந்த விழாவிற்கு வந்த பின்பு தான் நிறைய திறமை உள்ளவர்கள் இந்த படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் எனத் தெரிந்துகொண்டேன். அவர்களின் மற்ற திறமைகள் இங்கே பார்த்தபோது, வியப்பாக இருந்தது. இந்தப்படத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சொல்லவேண்டும். தொழில்நுட்ப குழுவில், அத்தனை பேரும் கடினமாக உழைத்துள்ளார்கள்.
சகோதரர் நரேன் அவர்களுக்கு நன்றி. ஆர்த்தி கேரளாவில் ஒரு வுமன் ஐகான். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்குக் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. மாரி, ஶ்ரீனி இருவரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். இயக்குனர் அருண் கார்த்தி மிகச்சிறந்த நண்பர். படத்தை வித்தியாசமான ரசனையில் அழகாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 14 ல் படம் வருகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. என்று கூறினார்.
இயக்குனர் அருண் கார்த்திக் பேசியதாவது, முதன் முதலில் சொந்தமாகப் படம் இயக்குகிறோம் அதுவும் தயாரித்து இயக்குகிறோம் என்ற போது பயம் அதிகமாக இருந்தது. ஆனால் சொந்தமாகத் தயாரித்து இயக்க நமக்குத் தைரியம் வர ஒரு நல்ல கதை வேண்டும் அந்த வகையில் இந்தப்படத்தின் கதை இந்த முயற்சியை எடுக்க உந்துதலாக இருந்தது. என்ன தான் கதை இருந்தாலும் சொந்தமாகத் தயாரித்தாலும் உடனிருப்பவர்கள் அந்தக்கதையை நம்புபவர்களாக நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்குச் செல்லும் திறமை கொண்டவர்கள்.
அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது. திவாரகா தியாகராஜன் இசை, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு, முகேன் வேல் எடிட்டிங் இந்தப்படத்தை வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மாஸ்டர் மகேந்திரன் இந்தப்படம் மூலம் சகோதரராக கிடைத்துள்ளார். எனது வேலையைப் பாதி அவரே செய்து விடுவார், அவருக்குள் சினிமா ஊறியிருக்கிறது. அவருக்கான காலம் விரைவில் வரும். அவரைத்தாண்டி ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி என எல்லோருமே சிறப்பாகச் செய்துள்ளார்கள். இது உங்களை மகிழ்விக்கும் ஒரு அழகான காமெடி படம் என்று கூறினார்.