இளையராஜாவிற்கு சாதி அடிப்படையில்தான் எம்.பி. பதவி வழங்கப்பட்டது.. சீமான் விமர்சனம்
- தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா.
- இவருக்கு சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார்.
இளையராஜா
இதையடுத்து சமீபத்தில் விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். மேலும், சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சாதி அடிப்படையில் எம்.பி.பதவி வழங்கப்பட்டுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார்.
சீமான்
இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "இளையராஜாவை விட ஈடு இணையற்ற இசைமேதை இந்த நாட்டில் உண்டா..? உலக அளவில் எண்ணிக்கை எடுத்தோம் என்றால் பத்து பேரில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் எங்கள் மேதை இருப்பார். ஆனால், மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கும் போது ஈடு இணையற்ற இசை கலைஞனுக்கு கொடுத்தோம் என்று குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக தலித்திற்கு கொடுத்தோம் என்று கூறுகிறீர்கள். இவ்வளவு உயரத்திற்கு வந்தும் அந்த சாதி இழிவு ஒழியவில்லை" என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.