வெறும் மார்க் மட்டுமே வாழ்க்கை கிடையாது - சூர்யா அறிவுரை
- 1980 முதல் ஆண்டுதோறும் சிவகுமார் அறக்கட்டளை பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறது.
- 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகையை சூர்யா வழங்கினார்.
பழம்பெரும் நடிகரான சிவகுமார் 1979-ல் தனது 100- வது படத்தின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதை நடிகர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். பின்னர் 1980 முதல் ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பெற்றோரை இழந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகையை சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது, கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள். வாழ்க்கை முழுவதும் கல்வி ரொம்ப தேவையான ஒரு விஷயம். ஏனென்றால் சமூகத்தில் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. சாதி, மதம் இவை அனைத்தையும் கடந்து எப்படி நாம் வாழ்க்கையை பார்க்க போகிறோம். வெறும் மார்க் மட்டுமே கிடையாது வாழ்க்கை. அதை தாண்டி வாழ்க்கையை எப்படி புரிந்து கொள்ளலாம்.
தொழிலுக்கும் சுற்றி இருக்கும் அறிவியலுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதை சொல்லிக் கொடுப்பது கல்வி. அந்த கல்வி சூழலை அழகாக வைத்து கொள்ள ரொம்ப ரொம்ப முக்கியம் ஆசிரியர்கள். இங்கு வந்திருக்கும் ஆசிரியர்களை பார்க்கும் போது எவ்வளவு சவால்கள் இருக்கும் அதை எல்லாம் தாண்டி ஒரு பள்ளிக்கு வரும் மாணவர்களை எவ்வாறு ஊக்குவிக்கிறார்கள், இவ்வளவு தூரம் நான் வருவதற்கு என் ஆசிரியர்கள் தான் காரணம் என்று மாணவர்கள் கூறும் போது, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களுக்கும் தலைவணங்கி நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
மூன்று வருடமாக அகரம் அரசுடன் சேர்ந்து இயக்கி வருகிறது. இந்த வருடம் ஒரு லட்சம் மாணவ- மாணவிகளை கல்லூரி மற்றும் பள்ளிக்கு மீட்டு வர உதவியது. நாங்கள் 14 வருடங்களாக சமமான கல்வி கொடுக்க வேண்டும் என்று பல அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரைக்கும் 5200 மாணவ-மாணவிகளின் வாழ்க்கையை மாற்ற முடிந்தது. ஆனால், அரசுடன் சேர்ந்து இயக்கி மூன்று வருடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற முடிந்துள்ளது. அரசுடன் சேர்ந்து பயணிப்பது அகரத்தின் பெருமை" என்று கூறினார்.